2011/02/14

அவமானம் அடைந்த?

திருட்டு பட்டம் சுமத்தியதால் மேலும் ஒரு மாணவி தீக்குளித்து தற்கொலை; தலைமை ஆசிரியை கைது


சென்னையில் சில நாட்களுக்கு முன்பு அடையாறு ஜானகி அம்மாள் கல்லூரியில் பணம் திருட்டு போனதால் திவ்யா என்ற மாணவியை பேராசிரியைகள் நிர்வாணப்படுத்தி சோதனையிட்டனர். இதனால் அவமானம் அடைந்த மாணவி திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 4 பேராசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.  அதன் பிறகு சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தேன்மொழி என்ற 8-ம் வகுப்பு மாணவி தேர்வில் காப்பி அடித்ததை ஆசிரியை கண்டு பிடித்து திட்டியதால் அவமானத்தில் தற்கொலை செய்தார். இதையொட்டி ஆசிரியை ஆண்டாள் இட மாற்றம் செய்யப்பட்டார்.

இதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆசிரியை திட்டியதால் பிளஸ்-2 மாணவி திரிஷா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.  இந்த பரபரப்பு அடங்கு வதற்குள் கும்பகோணம் அருகே திருட்டு பட்டம் சுமத்தியதால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம் அருகே உள்ள மேலாத்துகுறிச்சியை சேர்ந்த குமார் என்பவரது மூத்த மகள் சூரியா(14). ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று சூரியா பள்ளி கூடம் சென்றார். பள்ளி முடிந்ததும் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தனது பேக்கை சூரியாவிடம் கொடுத்து மொபட் வண்டியில் வைக்கும்படி கூறினார். அதை சூரியா மொபட்டில் வைத்தார். சிறிது நேரம் கழித்து விஜயலட்சுமி அங்கு வந்தார். அப்போது பேக் திறந்து இருந்தது. உள்ளே இருந்த ரூ.500-ஐ காண வில்லை. மொபட் அருகில் நின்ற சூரியாவின் கையில் பணம் இருந்தது. உடனே தலைமை ஆசிரியை பணத்தை திருடினாயா? என்று கேட்டார்.

அதற்கு மாணவி சூரியா, நான் பணத்தை திருட வில்லை, பேக்கில் இருந்து பணம் கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்து உங்களிடம் தர வைத்துள்ளேன் என்றார். ஆனால் அதை தலைமை ஆசிரியை நம்பவில்லை. அவர் மாணவியை திட்டினார்.   மாணவிகள் மத்தியில் தன்னை தலைமை ஆசிரியை திருட்டுபட்டம் சூட்டி திட்டியதால் சூரியா மனவேதனை அடைந்து அழுதார். வீட்டுக்கு சென்றதும் இதுபற்றி தாயார் ஆனந்த வள்ளியிடம் கண்ணீர் மல்க கூறினார். அவரை தாயார் சமாதானப்படுத்தினார். ஆனால் சூரியா வேதானையில் இருந்து மீளவில்லை.

வீட்டில் இருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் கூச்சல் போட்டு அலறினார்.   அவரது சத்தம் கேட்டு வெளியில் நின்ற ஆனந்த வள்ளி, மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.அதற்குள் சூரியாவின் உடல் கருகியது. உடனே அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது நிலைமை மோசமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருவளர்செல்வி விரைந்து வந்து மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் மாணவி சூரியா நீதிபதி சாந்திலியனிடம் மரணவாக்கு மூலம் அளித்தார். தலைமை ஆசிரியை பணம் திருடியதாக என்னை திட்டினார். நான் பணம் திருடவில்லை என்றேன். ஆனால் அதை தலைமை ஆசிரியை நம்பவில்லை. என் முகத்தில் விழிக்காதே என்று திட்டினார். இதனால்மன வேதனை அடைந்து தீக்குளித்தேன்என்று கூறினார்.

மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இன்றுகாலை அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை கைது செய்தனர். அவரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் திருவளர் செல்வி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். தலைமை ஆசிரியை திட்டியதால் மாணவி தீக்குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக